என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீஸ் அதிகாரிகள் சம்மன்"
சென்னை:
தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
இதன் பிறகும் கடைகளில் சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றத்தில் செயல்பட்டு வந்த குட்கா குடோனை வருமானவரித்துறையினர் கண்டுபிடித்தனர். இந்த சோதனையில் குட்கா விற்பனை தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் சிக்கின.
சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்வதற்கு ஒவ்வொரு மாதமும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதும் தெரியவந்தது. யார்-யாருக்கு எவ்வளவு லஞ்சப்பணம் கொடுக்கப்பட்டது என்பதை ஒரு டைரியில் எழுதி வைத்திருந்தனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், புழல் உதவி கமிஷனராக பணியாற்றிய மன்னர் மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத் ஆகியோரது பெயர்கள் குட்கா விவகாரத்தில் அடிபட்டது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆரம்பத்தில் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஐகோர்ட்டு குட்கா வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது.
சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக குட்கா வழக்கில் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். குடோன் அதிபர் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, அதிகாரிகள் பாண்டியன், செந்தில் முருகன், சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் யாருக்கும் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. பலமுறை 6 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா ஊழல் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் கடந்த வாரம் தொடர்ச்சியாக 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதை ஏற்று கடந்த 2 நாட்களாக நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் அவர் ஆஜராகி வருகிறார்.
அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சரமாரியாக கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். குட்கா ஊழல் முறைகேட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது குறித்து விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த 2 நாட்களாக நடந்த விசாரணையில் அவர் பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். அதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.
குட்கா விவகாரத்தில் முதலில் முன்னாள் அமைச்சர் ரமணாவின் பெயர் இடம்பெறாமலேயே இருந்து வந்தது.
திடீரென அவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். வணிக வரித்துறை அமைச்சராக இருந்த ரமணாவுக்கு குட்கா முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்று 3-வது நாளாக விஜயபாஸ்கரும், ரமணாவும் மீண்டும் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி.ஜி.பி. ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. புகாருக்குள்ளான மற்ற போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. இதுவரையில் யாரும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை.
தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அடுத்தக்கட்டமாக போலீஸ் அதிகாரிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
புகாருக்கு உள்ளான போலீஸ் அதிகாரிகளில் இன்ஸ்பெக்டர் சம்பத்துக்கு மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதை ஏற்று அவரும் விசாரணைக்காக ஆஜரானார்.
ஆனால் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், உதவி கமிஷனர் மன்னர் மன்னன் ஆகியோர் விசாரணைக்காக சி.பி.ஐ. அலுவலகத்துக்கு இதுவரை வரவழைக்கப்படவில்லை.
எனவே விரைவில் இவர்கள் 3 பேருக்கும் சம்மன் அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன், சி.பி.ஐ. அதிகாரிகளின் கைது வளையத்துக்குள் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
விஜயபாஸ்கர், ரமணாவிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பின்னர் குட்கா வழக்கில் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் குட்கா விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. #GutkhaScam #CBI
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்